சர்க்கரை போதை!


சர்க்கரை ஒரு இனிமையான உணவு, நமது உடல் வேலை செய்வதற்கான சக்திவாய்ந்த எரிபொருள். நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளிலிருந்து (மாவுச்சத்து) சர்க்கரையை உறிஞ்சுவதற்கு நம் உடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நமக்கு ஆற்றல் தேவைப்படும்போது எடுத்துக்காட்டாக வாந்தி, வயிற்றுப்போக்கு, இரத்த இழப்பு போன்ற கடுமையான நீரிழப்பு ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும், எனவே இது போன்ற சூழ்நிலைகளில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை முக்கிய பங்கு வகிக்கிறது.


நம் உடலுக்குத் தேவையில்லை என்றாலும் கூட நாம் ஏன் தினமும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகளை அடிக்கடி எடுத்துக்கொள்கிறோம்? இது போதை காரணமாக உள்ளது. ஆமாம், புகைபிடித்தல், ஆல்கஹால் மற்றும் வேறு போதை பழக்கத்தைப் போன்று, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகளை தவறாமல் உட்கொள்வது ஒரு போதை. நிச்சயமாக, இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். சர்க்கரையை எடுத்துக்கொள்ளும்போது  உங்கள் மூளைக்குள் ஒரு ரசாயனத்தை வெளியிடுகிறது. ஒரு நல்ல உணர்வை உருவாக்குகிறது, எனவே நீங்கள் மீண்டும் மீண்டும் அந்த இன்பத்தைப் பெற முனைகிறீர்கள். நீங்கள் அடிமையாக இருக்கிறீர்களா இல்லையா என்பதை சரிபார்க்க விரும்பினால், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள் அதாவது வெள்ளை சர்க்கரை, வெல்லம், செயற்கை பழ பானங்கள், குளிர் பானங்கள், சர்க்கரையுடன் கூடிய பானங்கள், சாக்லேட்டுகள், மிட்டாய்கள், பிஸ்கட்டுகள் ஒரு வாரத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் இருந்து பாருங்கள்.


அனைவரும் சர்க்கரையை காலங்காலமாக எடுத்துக்கொண்டு தானே வருகிறோம், அது சமூக ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது, பிறகு நாம் ஏன் அதை போதைப்பழக்கமாக கருத வேண்டும்? ஏனெனில் சுத்திகரிக்கப்பட்ட வடிவத்தில் எடுக்கப்படும் சர்க்கரைகள் உணவு உண்டால் ஏற்படும் வயிறு  நிரம்பிய உணர்வை (satiety) ஏற்படுத்தாது,.எனவே உங்களுக்குத் தேவையானதை விட அதிகமாக எடுத்துக்கொள்ள முனைகிறீர்கள். நாள் முழுவதும் உங்கள் லேப்டாப்ப்பிலேயே (கணினி)  உட்கார்ந்து வேலை செய்ய எவ்வளவு சர்க்கரை தேவைப்படலாம் என்பதை சற்று  சிந்தியுங்கள். உங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையே தேவையில்லை! அதுதான் உண்மை! மேலும் நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கு மற்ற சர்க்கரையின் மூலங்களிலிருந்து (அரிசி, கோதுமை, ராகி போன்ற மாவுச்சத்து உணவுகள்) சர்க்கரையை எளிதாகப் பெறலாம்.


பெரியவர்கள் குழந்தைகள் வித்தியாசமின்றி  சர்க்கரையை விரும்புகிறார்கள். "வளர்ந்த பிறகும் சர்க்கரையை எடுத்துக் கொள்ளும் பெரியவர்கள் இன்னும் குழந்தைத்தனமாக இருக்கிறார்கள்" என்றும் கூறலாம். குழந்தைகள் பொதுவாக அதிக உடல் சுறுசுறுப்புடன் இருப்பார்கள், எனவே சர்க்கரையை அதிகம் சேமிக்காமல் எரிக்கிறார்கள், ஆனால் சமீபத்தில் சில வருடங்களிலிருந்து குழந்தைகளும் அதிக எடை போடுகிறார்கள். இதற்கு  மொபைல் போன்களின்(கைபேசி) அதிகப்படியான பயன்பாடு மற்றும் உடல் உழைப்பு  இல்லாமையே  காரணமாகிறது. பெரியவர்கள் உடல் உழைப்பு  கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக உள்ளது, அதே அளவு சர்க்கரையை எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும்? 


நமது உடல் ஒரு அதிநவீன சாதனமாக இருப்பதால் கல்லீரல் மற்றும் தசைகளில் கிளைகோஜனாக சில கூடுதல் சர்க்கரைகளை சேமிப்பதற்கான திறனை கொண்டுள்ளது, அதன் பிறகு கல்லீரல் மீதமுள்ள சர்க்கரையை கொழுப்பாக மாற்றி தோலின் கீழ் சேமித்து வைக்கிறது. உங்களைப் பார்க்கும் மக்கள் இந்த கட்டத்தில் "நீங்கள் செழிப்பாக (chubby) இருக்கிறீர்கள்" என்று கருத்து தெரிவிப்பார்கள். அதன்பிறகும் நீங்கள் தினமும் அதிக அளவில் சர்க்கரையை எடுத்துக் கொண்டால் கையாள கடினமாகி, கல்லீரலிலேயே  கொழுப்பாக தங்கும். உங்களை ஸ்கேன் செய்யும் மருத்துவர் "உங்கள் கல்லீரலில் கொழுப்பு தெரிகிறது" என்று தெரிவிப்பார். அதிகப்படியான சர்க்கரைகள் சேமிப்பு நோக்கத்திற்காக கொலஸ்ட்ரால் ஆக மாற்றப்படுகிறது, இது முதலில் சருமத்தின் அடியில்  சேமித்து வைக்க பாதுகாப்பான இடத்தைக் கண்டுபிடித்து, பின்னர் அது வயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில்  குடியேறுகிறது, பின்னர் கல்லீரலுக்குள், பின்னர் தசைகள் மற்றும் கணையம் போன்ற பல்வேறு உறுப்புகளுக்குள்.. பின்னர் இரத்த நாளங்களுக்குள் கூட!


உடலால் இன்சுலின் உதவியுடன் அதிகப்படியான சர்க்கரைகளை கையாள முடியாதபோது, சர்க்கரைகள் இரத்த ஓட்டத்தில் வெளியிடப்படுகின்றன, இந்த நேரத்தில் ஆய்வக அறிக்கைகளைப் பார்க்கும் மருத்துவர் "நீ நீரிழிவு நோயாளி" என்று கூறுவார். சர்க்கரை போதை நீரிழிவு நோய் (பல பிற சிக்கல்கள்), அதிக கொலஸ்டிரால், கல்லீரல் கொழுப்பு நோய்,  இதய நோய்கள் மற்றும் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.


இந்த அனைத்து பிரச்சனைகளையும் தடுக்க எந்த விதமான சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகளையும் எந்த வடிவத்திலும் எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும். அந்த பிரச்சனைகள் வெறும் பிரச்சனைகள் அல்ல. உயிர் கொல்லி பிரச்சனைகள்! இனிமையான மற்றும் மிகவும் பயங்கரமான சர்க்கரையிலிருந்து உங்களை தற்காத்துக்கொள்ள வேண்டிய  நேரம் இது. இப்பொழுதே இந்த பயிற்சியை ஆரம்பித்து, சிறந்த ஆரோக்கியத்திற்கு ஏற்ற வாழ்க்கையை நடத்துங்கள். தேவையற்ற சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகளை உட்கொள்வதை நிறுத்த இப்போது ஒரு முடிவு எடுக்கவும். இல்லையெனில் கூடிய சீக்கிரம் சர்க்கரை உங்களுக்கு  ஒரு முடிவு கட்டிவிடும்!


Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு!